டில்லி:

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\

கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி, காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார்வெடிகுண்டு தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உள்பட   40 சிஆர்பிஎப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தன. மேலும் உயிரிழந்த சிஆர்பிஎஃப் குழந்தைகளின் கல்வி செலவை தாமே ஏற்பதாக இந்திய வீரர் சேவாக் அறிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. மாநில அரசுகளும், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி மட்டுமல்லாது, அரசு பணிகளிலும் வாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

இன்று டில்லியில் நடைபெற்ற,  இந்திய – திபெத் போலீஸ் விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

மத்திய அரசின் விருப்ப நிதி நன்கொடை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து இந்த தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு அறிவித்து இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.