திருப்பூர்:

டந்த 60 ஆண்டு கால மக்களின் கோரிக்கையான  அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்ட தண்ணீர் பிரச்னையை போக்கி மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பே  திட்டமிடப்பட்டது அத்திக்கடவு – அவிநாசி திட்டம்.

இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் கூறி வந்த நிலையில், ஆண்டுகள் ஓடியதே தவிர திட்டத்திற்கான எந்தவொரு முயற்சியும்  நடைபெற வில்லை. தேர்தல் சமயத்தில் இது தொடர்பாக பிரச்சினை எழுவதும், பின்னர் ஓய்துபோவதுமாக தொடர்ந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதோடு அந்த திட்டத்திற்காக ரூ. 1862 கோடி ஒதுக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு பிறகு முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி,  2017ம் ஆண்டு  திருப்பூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து மின்மோட்டார் பம்ப் மூலம் குழாய் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை நிறப்ப இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை  நிறைவேற்றுவதற்கான ரூ. 1532 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் திட்டத்தின் சுய பயன்பட்டிற்காக 132 கோடி ரூபாய் மதிப்பில் சூரிய ஒளி மின் திட்டம் செயப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று பிள்ளையார் சுழி போடப்பட்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று அவிநாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி, சபாநாயகர் தனபால் உள்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து,  தமிழக அரசால், மத்திய அரசுக்கு அனுப்பப்படும் முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட http://www.tnhouse.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வேளச்சேரியில் ரூ.30 கோடியில் கட்டப்பட உள்ள வனத்துறை தலைமை அலுவலக கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.