சென்னை: மெட்ரோ ரயிலின் விரிவாக்க பணியாக புழுதிவாக்கம்- சோளிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான  பணிகள் தொடங்கி உள்ளது. இது தென்சென்னை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்று மெட்ரோ ரயில் போக்குவரத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயிலின் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மக்கள் பயன்படும் வகையில், மாதவரம் முதல் சோளிங்க நல்லூர் வரை மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலான இரண்டாம் கட்ட மற்றும் ஐந்தாம் கட்ட கட்டுமானத்திற்கான காலக்கெடுவை நவம்பர் 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. 118.9 கிலோமீட்டருக்கு கட்டப்படும் இந்த ரயில் பாதை 2026 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணி  2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) மூலம் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் – கே.இ.சி. இன்டர்நேஷனலிடம் வழங்கப் பட்டது.  அதைத்தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அஸ்திவாரம் அமைப்பதற்கும் தூண் கட்டுவதற்குமான பைலிங் பணிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் ஒருபகுதியாக,  கோவிலம்பாக்கத்தில் உயர்மட்ட வழித்தடத்திற்கான கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளதால்,  மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப்பணி தொடங்கியுள்ளன.

11.6 கிமீ உயரமான மெட்ரோ நடைபாதையை புழுதிவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. மேலும் தற்போது கட்டப்படும் ரயில் பாதை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட் சாலை, காமராஜ் தோட்டத் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம், குளோபல் ஆஸ்பத்திரி மற்றும் எல்காட் ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கப்படும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.