சென்னை,
நீட் தேர்வு காரணமாக, தனது டாக்டர் கனவு பொய்த்துபோனதாக, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதால், தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், மாணவி அனிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாரதியஜனதா தலைவர்கள் கூறி வந்தனர். குறிப்பாக எச்.ராஜா, அனிதாவின் மரணம் தற்கொலையா என விசாரணை நடத்த வேண்டும். நீட்-க்கு ஆதரவான மாணவனின் தாய் தற்கொலை செய்து கொண்டபோது இவர்களெல்லாம் எங்கு சென்றிருந்தனர்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பாரதியஜனதா தலைவர்களின் இதுபோன்ற கருத்துக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினரும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வழக்கறிஞர் அருள்மொழி பதில் அளித்துள்ளார்.
அதில், நீங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள் என காட்டமாக கூறி உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது,
பொதுநலனுக்காக தன்னுயிர் நீத்து, கொள்கைகளுக்காக உயிரை மெழுகாய் உருக்கும் கூட்டம் தான் இந்த மண்ணில் இருக்கிறது. பிண அரசியல் செய்வது எங்கள் மண்ணின் கொள்கையல்ல திரு. ராஜா. அது பாஜக என்கிற எந்த அறநெறியும் இல்லாத கட்சியின், அதன் மூலாதாரமான ஆர்.எஸ்.எஸ்ஸின் கேடுக் கெட்ட யுக்தி.
உங்கள் பிரதமர், முதல்வராய் இருந்த போது கோத்ரா ரயில் எரிப்பின் சவங்களை அகமதாபாத் முழுக்க ஊர்வலமாய் கொண்டு சென்று ஹிந்துத்துவ வெறியாட்டத்தை கிளறி இந்தியா பார்த்திராத கொலைக்களமாக மாற்றியது தான் உங்களுடைய ‘பிண அரசியல்’
அரசு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று சொன்னவுடன், அதை வெளிக்கொண்டு வந்த எல்லோரையும் வரிசையாக தீர்த்துக் கட்டி விட்டு, ஒன்றுமே தெரியாதது போல் ம. பி-யினை ஆண்டுக் கொண்டு இருக்கிறாரே செளகான், அது தான் ‘பிண அரசியல்’
போன மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பில் தராமல் இறந்த குழந்தைகள் மட்டும் 200ற்றினை தாண்டும். எந்தவிதமான பொறுப்பினையும் ஏற்காமல், தன் சொந்த செலவில் உதவப் போன அரசு மருத்துவரையும் சஸ்பெண்ட் செய்து விட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கோலகலமாக கொண்டாட வேண்டுமென்று சொன்னாரே உ.பியின் யோகி அத்யானந்த், அது தான் ‘பிணந்தின்னி அரசியல்’.
வெல்ல வேண்டுமென்பதற்காக ஒரு ரேபிஸ்ட், அக்யுஸ்ட் டூபாக்கூர் சாமியாரின் காலில் விழுந்து வணங்கி, வென்று, அந்த சாமியார் செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் சொன்னதும், 30க்கும் மேற்பட்ட உயிர்கள் கலவரத்தில் மாண்டப் போதும், கைக்கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாரே ஹரியானாவின் மனோகர் லால் கட்கர் அது தான் நிஜமான “பிணவேட்கை அரசியல்”
ஜார்கண்ட், அஸ்ஸாம் என எங்கெல்லாம் உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் ரத்தக்கறை இல்லாமல், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களின் உயிர்ப்பலி இல்லாமல் ஆட்சி நடக்கிறதா?
திராவிட இயக்கங்களின் மீது நா கூசாமல் அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைக்கின்ற அளவிற்கு ஜனநாயக முறைப்படி, உங்களுக்கு இங்கே இடம் கொடுத்தத்து தவறோ என்று கருத வைத்து விடாதீர்கள்.
ஒரு மாநிலமே உணர்வெழுச்சியிலும், கடுங்கோவத்திலும் இருந்தாலும் ஒரு அசம்பாவிதம் கூட இங்கே நடக்காது. அறவழியிலும், காந்தீய முறையிலும், சட்டத்திற்கு உட்பட்டும் நாங்கள் எங்களுடைய உரிமைக்காக குரல் கொடுக்கிறோம். இங்கே எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய தொண்டர்களையும், இளைஞர்களையும் அமைதியாக இருக்க வைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கழகங்கள் இல்லாத தமிழகத்தைப் பற்றிய உங்களின் கனவு கலையும் முன், காவிகளே இல்லாத தமிழ்’நாட்டை’ எங்களால் உருவாக்க முடியும். 2000 வருடங்களுக்கு மேலாக நாடாய் இருந்த வரலாறு எங்களுண்டு.
தேவையில்லாமல் திசை திருப்பவோ, மடை மாற்றவோ, பழி சுமத்தவோ செய்யாதீர்கள். தமிழ் மக்கள் அமைதியாக இருப்பதை கோழைத்தனம் என்றோ, பயமென்றோ, கையாலகத்தனமென்றோ இறுமாந்து இருக்காதீர்கள். அழுத்தி வைக்கப்பட்டிக்கும் கோவம் ஒரு நாள் வெடிக்கும், அன்றைக்கு உங்களின் ராணுவத்தாலும் கூட அதை கட்டுப்படுத்த முடியாது. தேவையில்லாமல் தெற்கில் ஒரு கஷ்மீரை உருவாக்கி விடாதீர்கள்.
ஒரு முறை நாங்கள் அந்த கோட்டினை தாண்டி விட்டால், எங்களாலேயே திரும்புவது கடினம்.
யாகாவராயினும் நா காக்க, காவாக்கால்………
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.