புதுச்சேரி

நீட் விவாகரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டமைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனக்கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த எழுச்சிமிகு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பளளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு காரணமாக, மாநில மொழி பாடத்திட்டத்தில் படித்த அரியலூர் அருகே உள்ள கிராமத்து மாணவியான அனிதா, 1176 மதிப்பெண் எடுத்தும், தனது கனவு படிப்பான எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் ஆகியுள்ளது.

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய லேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், மாநில உரிமையை பறிக்காதே!, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும் பல்வேறு மாணவ அமைப்புகள் சார்பில் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக ராஜா திரையரங்கம் அருகே இருந்து மாணவ அமைப்பினர் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற போது போலீஸார் அவர்களை தலைமை தபால் நிலையம் அருகே நடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் தலைமையில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் இந்திரா காந்தி சிலையில் இருந்து மறைலையடிகள் சாலை, அண்ணா சாலை வழியாக பேரணியாக வந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.