சென்னை,

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள  பெங்களூர் ரிசார்ட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின், காங்கிரஸ் விரோத மாற்றந்தாய் போக்குக்கு கடும் கண்டனங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக்ததில் அதிமுக எம்எல்ஏக்கள், சசிகலா தரப்பினரால் கடத்தி செல்லப்பட்டு, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு குதிரை பேரம் நடைபெற்றபோது, மத்திய அரசு என்ன செய்தது? அப்போது வருமான வரிதுறை எங்கே போனது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கூவத்தூர் விடுதியில்  அதிமுக எம்எல்ஏக்களுக்கான பேரத்தின் உச்சத்தில் கூட ஐடி துறை ரெய்டு நடத்தவில்லை என்றும் இதன் காரணமாக  பாஜக அரசின் ஊழல் ஒழிப்பு முகத்திரை கூவத்தூரில் கிழிந்து தொங்கிவிட்டது என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார்.

சுதந்திரமான வருமான வரித்துறையை, கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ள ஸ்டாலின்,

குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்  தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூரில் கு திரை பேரம் நடந்தபோது வேடிக்கை பார்த்தது ஏன்? என்று காட்டமாக கூறியுள்ளார்.

பெங்களூர் ரிசார்டில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தது ஏன்.

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கான பேரத்தின் உச்சத்தில் கூட வருமான வரி துறையினர் கூவத்தூரில் ரெய்டு நடத்தவில்லை. மத்திய அரசின் ஊழல் ஒழிப்பின் முகத்திரை கூவத்தூரில் அனுமதிக்கப்பட்ட பேரத்தால் கிழிக்கப்பட்டு நிற்கிறது.

ஒருதலைபட்சமாக வேண்டாதவர்கள் மீது மட்டும் ரெய்டு நடத்துவது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்றதல்ல

மேலும், புதுச்சேரியில் முதல்வருக்கு ஆதரவாக பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் ரெய்டு செய்த வருமான வரித்துறை, தமிழகத்தில் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், மற்றும் இந்நாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி  ஆதரவாளர்கள் மீது ஏன் சந்தேகத்தை எழுப்ப வில்லை என்றும் மத்திய அரசுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

வருமான வரித்துறை,சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை மத்தியில் ஆளும்  பா.ஜ.க. அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை பிரதமர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.