தமிழுக்கு அமுதென்று பெயர். உலகில் உள்ள  எல்லா மொழிகளிலுமே  தொன்மையான மொழி தமிழ்மொழி.  இதற்கு ஒரு சான்றும் உண்டு .அதாவது “கல் தோன்றி  மண்  தோன்றா காலத்தில் முன் தோன்றிய  மூத்த தமிழ் ” என்று புலவன்  படியுள்ளான்.

அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை தமிழர்களும், இந்தியர்களும் புறக்கணித்து வரும் வேளையில், வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழை அமுதாக நினைத்து போற்றி வருகிறார்.

தமிழ் படித்தால்தான் கல்லூரியில் இடம் தரப்படும் என்று, தமிழை வளர்த்து வருகிறார் ஜெர்மன் பேராசிரியர் நிக்லஸ். தான், நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் தமிழ் உச்சரிப்பை கண்டு வியந்து, தமிழ் பேச கற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.

ஜெர்மனியில் இருக்கும் பிரபலமான  கொலாஞ்சே பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் திராவிட மொழிகள் துறை உள்ளது.  ஐரோப்பிய நாடுகளிலேயே உள்ள  மிகப்பெரிய தமிழ்த்துறை, இந்த பல்கலைக்கழகத்தின் துறை என்ற சிறப்பை பெற்றது.

இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 தமிழ் புத்தகங்கள் கூடிய தனி நூலகம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே அண்டை நாடுகளில் இருக்கும் நூலகங்களிலேயே  மிகப்பெரிய தமிழ் நூலகம் இதுதான்.

தமிழுக்கு ஜெர்மனியில் இவ்வளவு சிறப்பையும் பெற்று தருபவர் தமிழ்மீது தீராத காதல்கொண்ட பேராசிரியர் உல்ரைக் நிக்லஸ் என்பவர்.

கடந்த  1970ம் ஆண்டு மற்றும் 1980ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாவாசியாக  வந்த நிக்லஸ், தமிழர்களின் கலாச்சாரம் பிடித்து போக, இங்கேயே தங்கி  திராவிட இயக்கம், பெரியார் சித்தாந்தம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது பற்றுகொண்டு அதைப்பற்றி விரிவாக கற்க தொடங்கினார்.

தமிழில் சிறந்த புலமை பெற்ற நிக்லஸ், சிங்கப்பூரில் உள்ள தென்கிழக்காசிய பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகள் தமிழ்ப்பேரசியராக பணியாற்றி  உள்ளார். பின்னர் ஜெர்மனியில்  கொலாஞ்சே பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அங்கு இந்தியவியல் மற்றும் திராவிட மொழிகள் துறைக்கு தலைவராக பொறுப்பேற்று, தமிழை இந்தியாவுக்கும் வெளியேயும் வளர்த்து வருகிறார்.

இன்றுவரை, அந்த பொறுப்பை வகித்து வரும் நிக்லஸ், “பெரியாரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று கூறி உள்ளார்.

மேலும், தனது  துறையில் சேர விரும்பும் மாணவர்கள் “திராவிட மொழிகளில் ஒன்றை நிச்சயம் படிக்க வேண்டும். குறிப்பாக, தமிழ் படித்தால் தான் எனது துறையில் இடம் கிடைக்கும்” என்று கூறி தமிழை படிக்க ஆர்வத்தை உருவாக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே முத்தொள்ளாயிரம் நூலை மையமாக வைத்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும்,சிவாஜி கணேசனின் திரைப்படங்களைப் பார்த்து, அவரின் தமிழ் உச்சரிப்பில் மயங்கி, தமிழ்ப்பேச கற்றுக்கொண்டதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார்.