புதிய நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் வீசிய மர்மப்பொருளில் இருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதால் எம்.பி.க்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓட முயன்ற அவர்களை எம்.பி.க்கள் சிலரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர்.

இதில் ஒருவர் பெயர் சாகர் சர்மா என்பதும் அவர் மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா சிபாரிசில் பார்வையாளர் பாஸ் வாங்கி மக்களவையில் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தவிர நாடாளுமன்றத்தின் வெளியே போக்குவரத்து பவன் அருகே மற்றொரு பெண் மற்றும் ஆண் என இரண்டு பேர் இதேபோல் மர்மப்பொருளை வீசி கோஷம் எழுப்பியதாக அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மக்களவையில் பாதுகாப்பு மீறல் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “திடீரென 20 வயதுக்குட்பட்ட இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்தனர் அவர்கள் கைகளில் குப்பிகளை வைத்திருந்தனர்.

இந்தக் குப்பிகளில் இருந்து மஞ்சள் புகை வெளியேறியது. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அவர்கள் சில கோஷங்களை எழுப்பினர். புகை விஷமாக இருந்திருக்கலாம் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

குறிப்பாக 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13ஆம் தேதியன்று இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடைபெற்றிருப்பது பாதுகாப்பு குளறுபடியை காட்டுவதாக உள்ளது என்று விமர்சித்தார்.