சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரை கிரிமினல் குற்றவாளியை விசாரிப்பது போல் விசாரிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு டில்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தலைநகரில் நிலவியது.

அதையடுத்து, உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில் சிதம்பரம் கைது செய்யப்படுவது உறுதியானது.

இந்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ப.சி, தான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன் என்று கூறிவிட்டு, வீட்டுக்கு வந்தவரை, சிபிஐ அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வந்து அவரை கைது செய்ய முயன்றனர்.

சிதம்பரம் வீட்டின்  முன் வாசல் பூட்டப் பட்ட நிலையில், காங்கிரஸ் தொண்டர்களும் சிபிஐ அதிகாரிகளை தடுத்ததால், சிபிஐ அதிகாரிகள்  சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள்  சென்று,  சிதம்பரத்தை கைது செய்து, அவரை காரில் ஏற்றிக் கொண்டு, சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன் காரணமாக டில்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.