சென்னை:

.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்  திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் இன்று இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ப.சிதம்பரம் கைதுக்கு ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவளவன், ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல என்றும் நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்றும், அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று கூறினார்.

மேலும், ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,  சட்டரீதியான பாதுகாப்புகளை மதிக்காமல் கைது செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும்  திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.