சென்னை : நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா மேம்பாலம் 9 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெறவுள்ளது.

1971 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாலம் தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

80 தூண்களை கொண்டு தாங்கப்பட்டிருக்கும் இந்த பாலம் 800 மீட்டர் நீளமுள்ளது, ஆட்சி மாற்றம் மற்றும் கால மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றமடைந்துள்ளது.

தற்போது இந்த தூண்கள் யாவும் மறைக்கப்பட்டு சேமிப்பு கிடங்குகள் போல் அடைந்து கிடைப்பதோடு 1973 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி திறந்துவைக்கப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழா குறித்த கல்வெட்டுகள் தரைமட்டத்திற்கும் கீழ் சென்று விட்டது.

திறப்பு விழா குறித்த கல்வெட்டுகளை பார்வையில் படும்படி உயர் மட்டத்தில் வைக்கவும், அண்ணா மேம்பால சந்திப்பு சாலைகளிலும், பாலத்தின் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் கற்சிற்பங்கள் மற்றும் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட உள்ளது.

தவிர பாலத்தின் மீது திராவிட மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாசகங்கள் அடங்கிய ஓவியங்கள் சிற்பங்கள் ஆங்காங்கே வைக்கப்படுகிறது.

அமெரிக்க தூதரகத்திற்கு வரும் பார்வையாளர்கள் தூதரக ஓரத்தில் உள்ள சாலையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், அவர்கள் அமருவதற்காக பாலத்தின் கீழ் இருக்கைகள் அமைக்கப்படுகிறது.

மேலும், பாலத்தை ஒட்டிய செம்மொழி பூங்காவும் புதுப்பொலிவு பெறுவதோடு பாலத்தின் அருகில் பெரியார் சிலை அனைவரின் பார்வையில் படும் வகையில் உயரப்படுத்தப்படும்.

இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதை அடுத்து இதன் பணிகள் விரைவில் துவங்க இருப்பதோடு பணி துவங்கிய மூன்று மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

திராவிட கட்சியின் முதல் முதலமைச்சரான அண்ணா-வின் பெயரில் அமையப்பெற்றுள்ள இந்த பாலம் 50 ஆண்டுகளுக்குப் முன் என்ன வண்ணத்தில் மின்னியதோ அதே வண்ணம் விரைவில் ஜொலிக்க இருக்கிறது.