சாத்தூர்:

மாணவிகளை தவறான பாதைக்கு இழுக்க முயற்சித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் 10 காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்திருந்தனர்.

ஆனால், 5 நாள் மட்டுமே  விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபி சிஐடி விசாரணையின்போது, அவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் குறித்து நிர்மலாதேவி தெரிவிப்பரா என எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றியவர், நிர்மலாதேவி. கல்லூரி மாணவி கள் சிலரிடம் போனில் தொடர்புகொண்டு, கவர்னர் மாளிகை, பல்கலைக்கழக உயரதிகாரிகள் சிலரை அட்ஜஸ்ட் செய்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்றும், பொருளாதார ரீதியாகவும் வளமாக வாழலாம் என ஆசை வார்த்தை பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி நீதிமன்ற காவலில் மதுரையில் உள்ள மகளிர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், கவர்னர் தன்னிச்சையாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றையும் அமைத்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விசாரணையை தொடங்கி உள்ள சிபிசிஐடி போலீசார், நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதித்துறை 2வது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதையடுத்து,சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி, சாத்தூர் நீதித்துறை 2 வது நடுவர் நீதிமன்றம் நீதிபதி கலா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, வரும் 24-ம் தேதி மாலை வரை (5 நாட்கள்) போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்து நீதிபதி கலா உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணக்காக  அழைத்துச் சென்றனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணையின்போது நிர்மலா தேவி உண்மையை சொல்வாரா? அல்லது அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக வாய்மூடி மவுனம் சாதிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்..

முன்னதாக நிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றம் வர இருப்பதை தெரிந்த, அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர், நிர்மலா தேவி வந்த போலீஸ் வாகனம் முன்பு குவிந்து நிர்மலாதேவிக்கு எதிராக   கோஷங்களை. எழுப்பினார்கள்.

அதுபோல வழக்கறிஞர்கள் சிலரும் அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.