டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கிய நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிட விரும்பாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்  தேர்தல் குழு தலைவர் மிஸ்திரி அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இன்றுமுதல் 30ந்தேதிவரை வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை பதவிக்கான தேர்தல்  20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட முன்வரவில்லை. இடையில் மூத்த தலைவர்கள் கொண்ட ஜி23 குழு  காந்தி குடும்பத்துக்கு எதிராக குரல் கொடுத்தால்,  ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். ராகுலை கட்சி தலைவராக்க வேண்டும் அக்கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை ஏற்க மறுத்த ராகுல்,  காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே கட்சியின் தலைவராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இதனால், கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பல காங்கிரஸ் தலைவர்கள்,போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், அசோக் கெலாட்டும், சசிதருரும் ஓப்பனாக போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் வேட்புமனு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூவமாக வெளியிடப்பட்டதும், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். ராகுல்காந்தி போட்டியிட மறுத்துவிட்டதால், தான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கெலாட்டை எதித்து, சசிதரூர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிதரூர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜயசிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், முகுல் வாஸ்னிக் உள்பட சிலரும் போட்டியிடுவது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தலைமை பதவிக்கு போட்டியிடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என சவான் மற்றும் முகுல் வாஸ்னிக் மறுப்பு தெரிவித்துள்ளதாக  இருந்தாலும், ஏற்கனவே ராகுல் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த, ஜி – 23 குழுவை சேர்ந்த தலைவர்கள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருவது தெளிவாகிறது.