சென்னை:
ருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோரின் பங்களா மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன. காலை எட்டு மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் தொடங்கிய வருமான வரி சோதனை 12 மணிநேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது நிறைவடைந்துள்ளது. அதேபோல் கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, ”கடந்த நான்கைந்து நாட்களாகப் பத்திரிகைகளில் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை எல்லாம் பார்த்து ஜீரணிக்க முடியாமல் வயித்தெரிச்சல் காரணமாக ஏதாவது சேற்றை வாரி வீசவேண்டும் என்ற உள்நோக்கில் ரெய்டு செய்ய அனுப்பியிருக்கிறார்கள். நான் மோடிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் மடியில் கனமில்லை. இதுவரை ஐந்து முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். இன்று வேலுமணி கோடிகோடியாக கொள்ளையடித்து வைத்திருக்கும் உள்ளாட்சித் துறையை ஸ்டாலின் வைத்திருந்தார். துணை முதல்வராகவும் இருந்தார். அவர் மீதும் எங்கள் மீதும் எந்த வழக்கும் போடமுடியவில்லை. ஆனால், 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிவிட்டு சிறைபெற்ற ஒரு கட்சியின் சார்பாகக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, இங்கு ரெய்டு செய்துள்ளனர். இங்கு இருந்த பணமே ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்தான். குடும்ப செலவுக்காக வைத்திருந்தார்கள். ஏதோ எதிர்பார்ப்போடு அதிகாரிகள் வந்தார்கள். ஏமாற்றத்தோடு சென்றார்கள்” என்றார்.