டெல்லி: பிரதமர் மோடி நேற்று (மே 26ந்தேதி) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நிலையில், தனது தமிழக வருகை மறக்க முடியாதது என்று, நன்றி தெரிவித்து, அத்துடன் தனது வருகையை வரவேற்ற பொதுமக்களின் ஆரவாரம் தொடர்பான வீடியோ காட்சியையும் வெளியிட்டு டிவிட் பதிவிட்டு உள்ளார்.
பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்தார். தமிழகம் வந்த பிரதமருக்கு அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில், சுமார் ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடக்கி வைத்தார். அதன்படி, ரூ.500 கோடியில் மதுரை-தேனி இடையே அகல ரயில் பாதை, ரூ.590 கோடியில் சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில்பாதை, ரூ.116 கோடியில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சென்னையில் கட்டப்பட்ட 1,152 வீடுகள் திறப்பு, எண்ணூா்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் திருவள்ளூா்-பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் ஆகியவற்றை பிரதமர் தொடக்கிவைத்தார். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நேற்று இரவே அவர் டெல்லி திரும்பினார்.
இந்தநிலையில் தமிழக பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டு உள்ளார். அதில், ‘நன்றி தமிழ்நாடு; நேற்றைய பயணம் மறக்க முடியாதது’ என்று பதிவிட்டு நேற்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு விடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.