சேலம்: சந்தன கடத்தல் மன்னன் மறைந்த வீரப்பனின் சகோதரர் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக   சிறையிலேயே மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல சந்தனமரக் கொள்ளையனான, வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன். கடந்த 1989 ஆம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தனது எதிரிகளான ஐயண்ணன், அய்யன்துரை, குணசேகர், தனபால், முத்துக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதையன் கைது செய்யப்பட்டு மைசூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பிறகே சத்தியமங்கலம் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படுகிறது. வீரப்பனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பின்புலமாக இருந்த ஒரே காரணத்துக்காக மாதையன் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் கடந்த 34 ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பாதிப்புடன் சிறைவாசனம் அனுபவித்து வந்தார்.

அவ்வப்போது,  பரோலில் சென்று வரும் மாதையன், எந்தவொரு சச்சரவுகளிலும் சிக்காமல், சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். தனது முன்விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக அவர் போராடி வந்தார். ஆனால், போதிய நிதியை திரட்ட முடியவில்லை. அதனால், அவரது ஆசை நிராசையாகி போனது. இதற்கிடையில், மாதையனின் உறவினர்கள் பலரும் ஒன்றன் பின் ஒன்றாக மரணத்தை தழுவினர், கடந்த  2000 ஆம் ஆண்டில் மாதைய்யனின் மகன் மணிவண்ணன் சென்னையில் விபத்தில் மரணமடைந்தார், 2004 ஆம் ஆண்டு வீரப்பன் மரணம், 2018-ல் தங்கை முத்தம்மாள் மரணம், 2019 ஆம் ஆண்டு இரண்டாவது மருமகன் காசநோயால் மரணம் போன்றவை மாதையனுக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாதையன்,  கடந்த 2 ஆண்டுகளாக இதயவால்வு பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், 2022ம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி காலை 7 மணியளவில் சேலம் சிறையிலேயே மாரடைப்பால்  மரணம் அடைந்தார்.

”சிறைவாழ்வில் நோக்கமே, தண்டனைக் காலம் முடிந்து இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான்.  ஆயுள் தண்டனை என்ற பெயரில் மாதையனுக்கு மரண தண்டனையை கொடுத்துவிட்டனர் என மாநில அரசுமீதும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றவரையே முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு, மாதையனைப் போல ஏராளமானோர் சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசனம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்வதிலும் மாநில அரசு ஆர்வலம் காட்டுமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.