சென்னை: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் சட்டப்பரவை தொகுதியிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்து விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பண பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழகம் முழுதும் ஆங்காங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வாக்காளர்களுக்கு விநியாகிக்க இருந்த கணக்கில் வராத பணம் மிக அதிக அளவில் பறிமுதலாகி இருக்கிறது.
குறிப்பாக அதிமுக முக்கிய பிரமுகர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் குடோன்களில் இருந்து பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரின் நெருங்கிய நண்பரான அன்புநாதன் வீட்டில் இருந்து மட்டும் 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அதிமுகவினர் பணம் விநியோகிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இரவு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டது.
ஆனாலும் அதிமுகவினர் பல்வேறு வழிகளிலும் பண விநியோகத்தைத் தொடர்ந்தனர். குறிப்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பண பட்டுவாடா மிக அதிக அளவில் நடந்தது. இதை உறுதி செய்யும்படியாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, சில ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் கீழவாசல் மாநகர பகுதியில் 13 வார்டுகளில் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ‘ 1.40 கோடிக்கான ஆவணங்கள், மற்றும் வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டன.
இதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரவக்குறிச்சியை போன்றே இங்கும் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பண விநியோகம் நடைபெற்றதால், இந்தியாவிலேயே முதன் முதலாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட “பெருமையை” அரவக்குறிச்சி தொகுதி பெற்றது. அதே வரிசையில் இரண்டாவது தொகுதி என்ற “பெருமையை” தஞ்சை தொகுதி பெற்றுள்ளது.