a
 
அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்றத் தொகுதிகளில்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது போல மேலும் சில தொகுதிகளில் நடக்கலாம் என்ற செய்தி பரவியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நிமிடங்களில் துவங்க இருக்கும் நேரத்தில் இதுபோல செய்தி பரவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், அதிகளவில் பணம் வழங்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, தஞ்சை தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதே போல பல தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததாகவும், நடப்பதாகவும் தேர்தல் கமிசனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கடுமையான வாகன சோதனை, வருமானவரி துறை சோதனை பற்பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று தேர்தல் கமிசன் முனைப்புடன் செயல்பட்டும் பெரும்பாலான தொகுதிகளில் பணப்பட்டுவாடா ஜரூராக நடந்திருக்கிறது.
ஆகவே அதிக அளவில் புகார் வந்த தொகுதிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு துவங்கும் நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே தேர்தலை தள்ளிவைக்க ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. அதுமட்டுமல்ல.. தேர்தல் நடந்து முடிந்த பிறகும்கூட ஆதாரம் கிடைத்தால் தள்ளிவைக்கலாம்” என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.