அருள்மிகு அப்பக்குடத்தான் ஆலயம்,  கோவிலடி,  தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு

திருவிழா:

பங்குனி உத்திரத்தில் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.

தல சிறப்பு:

108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.

பொது தகவல்:

இத்தல இறைவன் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார். உபமன்யூ, பராசரர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு “அப்பக்குடத்தான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். 

மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் “கோவிலடி’ எனப்பட்டது என்றும் கூறுவர். 

நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் “தம்பதி சமேத பெருமாளாக’ அருள்பாலிக்கிறார்.

திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக்கண்ட திருமங்கை, திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்கிறார். 

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும். 

தல வரலாறு:

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர்,””மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,”என்றார்.  

இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார்.  

இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன்,””ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,”என கேட்டான். அதற்கு அவர்,””எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,”என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.

அமைவிடம்:

திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை வந்து, அங்கிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப் பள்ளி செல்லும் பஸ்சில் வரவேண்டும்.