தஞ்சை: நடிகை ஜோதிகாவின் பேச்சின் எதிரொலியாக, ஆட்சியர் கோவிந்த ராவ் தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா ராட்சசி படத்திற்காக விருது வாங்கினார். அப்போது விழாவில் பேசிய அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் நிலை மிகவும் மோசமாக உள்ளது, எந்தவித பராமரிப்பும் இல்லை என்றார். அவரது இந்த பேச்சு வைரலானது.

இந் நிலையில் ஆட்சியர் கோவிந்தராவ் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பிரச்னை ஏற்பட்டு ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை வராத கலெக்டர் தற்போது வந்து ஆய்வில் ஈடுபடுகிறார் என்றால் ஜோதிகா பேசியதன் விளைவுதான் இது.

மருத்துவமனை எப்படி இருக்கிறது என்றும், அதன் செயல்பாடுகள் பற்றியும் அறியவும் ஏதேனும் குறையிருந்தால் அதை உடனடியாக சரி செய்யவுமே கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் வேறு சில முக்கிய பிரச்னைகளை முன் வைக்கின்றனர். மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் கூறியதாவது:

பிரசவத்துக்காக வரும் பெண்கள் மேலே வெள்ளை உடையும், பச்சை பாவாடையும் அணிய வேண்டும். திடீரென வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் அந்த உடை கையில் இருந்தால் மட்டுமே அனுமதி என்று நெருக்கடி தருகின்றனர்.

மருத்துவமனைக்கு வெளியே ரூ.200 மதிப்புள்ள இந்த உடைகள் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லியும் பலன் இல்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் காசு கொடுத்து இந்த உடையை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த உடையை தர அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.