ராமேஸ்வரம்,

ன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர்.

இதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது.

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் வழிபடுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் பிரசித்தி பெற்றது. இந்த நாளன்று தங்களின் முன்னோர்கள் நினைவாக பிரசித்தி பெற்ற  ஆறுகள், கடல்களில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வரும் முதல் அமாவாசை, இன்று , உத்தராயண காலத்தில் வருவதால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இன்று தர்ப்பணம் செய்வதால், வானுலகத்தில் உள்ள முன்னோர்கள் சந்தோணமடைவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீராமர் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தவாரி கொடுத்தார்.

அதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள்  தங்கள் முன்னோர்களை நினைத்து சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசை  

தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம். இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது இந்துக்களின் ஐதிகம்.

பித்ருக்களுக்கான  திதி கொடுத்து, வழிபாடு செய்வதால், பல நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

பித்ருகடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறி இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள் என்றும், அன்று பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த வேளையில், அவர்களை அவர்களது பிள்ளைகள் வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் செய்து படையிலிட்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதால், அவர்கள் ஆசிகள் நமக்கும் கிடைக்கும் என்றும், ஆகவே  தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களை மனம் குளிரச்செய்வதுடன், அவர்களின்  துர் சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு அளிக்கும் என  கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் பெரியோர்கள் கூறி உளளனர்.

இதன் காரணமாகவே திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக் கூடல் தலமான பவானி கூடுதுறை போனற் பல்வேறு இடங்கிளில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் இவற்றில் எல்லாம் மிகச்சிறப்பானது, ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்து அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடுவதுதான் சிறப்பானது என்றும் சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே  ராமேஸ்வரத்தில்  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.