சென்னை: இன்று தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்பட   புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தை அமாவாசையை ஒட்டி மக்கள் புண்ணிய ஸ்தலங்களிலும், நீர் நிலைகளிலும்  குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

முன்னோர்களுக்கு தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி விட்டு தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

மதுரை வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் வைகையாற்றின் தென்கரை பகுதிகளான பேச்சியம்மன் படித்துறை, யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் அளித்து பின்னர் ஆற்றில் புனித நீராடி சென்றனர்.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சென்றனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரைக்குஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து எள், மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் குற்றாலத்திற்கு திரளான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அருவிகளில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் கடற்கரையில் நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் பதினாறு தீர்த்த கிணறுகளுடன் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், குற்றாலம், வேதாரண்யம், பூம்புகார், வைகை ஆற்றங்கரை, கோபாலசமுத்திரங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.