சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதா உள்பட புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் 17-ம் தேதி (அக்டோபர்) மீண்டும் கூட்டப்படுகிறது. இதையடுத்து இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
நடைபெற உள்ள ட்டப்பேரவை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு போன்ற விவகாரங்கள் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களால் பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி, ஆன்லைன் தடை மசோதா உள்பட புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாகவும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஆகியவை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது