ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் அடிக்கடி நடைபெற்று வருகிறது.  இன்று காலையும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

அந்த தகவலில், “ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அருகில் உயர் பாதுகாப்பு வளையத்தில் ஒரு எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாம் உள்ளது.  அந்த முகாமை குறிவைத்து இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  ஒரு தீவிரவாதி பதுங்கியிருப்பதால் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  ராணுவத்தின் 53 ஆவது ஆயுதம் ஏந்திய படையினரின் முகாம் இது” என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலையொட்டி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அந்தப் பகுதியில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இனி இல்லை என பாதுகாப்பு படைகள் அறிவிக்கும் வரை விமான நிலையம் இயங்காது என தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்தியதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.