மோடி தொகுதியில் ரிக்ஷா ஓட்டும் நெசவாளர்கள்!! அழிவு பாதையில் பனாரசி புடவைகள்


வாரனாசி:

ஜிஎஸ்டி.யால் உ.பி. மாநிலம் வாரனாசியில் புடவை நெசவாளர்களின் தொழில் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கை இழந்த பிரதமர் மோடி தொகுதியின் நெசவாளர்கள் பலர் ரிக்ஷா ஓட்ட சென்றுவிட்டனர். புடவை வர்த்தகர்கள், நூல் விநியோகஸ்தர்கள் மட்டும் சூழ்நிலை மாறும் என்று காத்திருக்கின்றனர்.

இது பற்றிய விபரம்….

வாரனாசி நகரம் பனாரசி புடவைகளுக்கு பெயர் பெற்ற நகரமாகும். பல நூற்றாண்டுகளாக இங்கு கைத்தறி மூலம் கலை நயத்துடன் கூடிய பனாரசி புடவைகள் தயார் செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு இந்த தொழிலில் குடும்பம் குடும்பமாக மக்கள் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். குடிசை தொழில் என்ற அளவில் இருந்து பனாரசி புடவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி.யால் இந்த தொழில் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அல்தாபூர் ரஹ்மான் என்பவர் கூறுகையில், ‘‘நான் சாப்பாடு வாங்கவே மிகவும் கஷ்டப்படுகிறேன். நான்கு பேர் உள்ள எனது குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதித்து வந்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பனாரசி புடவைகள் நெய்வதன் மூலம் வாரத்திற்கு ரூ.800 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தேன்.

ஆனால் தற்போது வாரத்துக்கு ரூ. 400 கிடைத்தாலே நல்ல வருவாய் என்ற நிலை உள்ளது. இது மேலும், ரூ. 300 வரை குறையும் என்ற நிலை உள்ளது. எதிர்காலம் மேலும் இருளும் என்ற சூழ்நிலையிலும் இந்த தொழிலில் உள்ளேன்’’ என்றார்.

சோராப் அலி என்ற நெசவாளர் கூறுகையில், ‘‘வாரனாசி ஜெயித்புரா மற்றும் சோரா நெசவாளர் காலனியில் இருந்த தறி கூடங்களை அனைத்து நெசவாளர்களும் மூடிவிட்டனர். அவர்கள் சைக்கிள் ரிக்ஷா அல்லது ஆட்டோ ரிக்ஷா ஓட்டத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் வரை ஹெச்ஏஆர் பேப்ரிக்ஸ் நிறுவனத்தை எனது மாமா அப்துல் ஹசல் நடத்தி வந்தார். 40 நெசவாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது இங்கு 20 முதல் 25 பேர் மட்டுமே உள்ளனர்’’ என்றார்.

16ம் நூற்றாண்டில் இருந்து இந்த நகரில் புடவை தொழில் பாரம்பரியமாக நடந்து வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் கொள்கை முடிவால் கடந்த ஒரு ஆண்டாக இந்த தொழில் முடங்கிவிட்டது. கடந்த நவம்பரில் பணமதிப்பிழப்பு அறிவிப்பும், ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதும் தான் இதற்கு காரணம்.

பனராசி வஸ்த்ரா உத்யோக் சங் என்ற வர்த்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜன் பெஹல் கூறுகையில், ‘‘இத் தொழில் தற்போது 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆண்டிற்கு பனாரசி புடவை தொழில் வர்த்தகம் ரூ. 5 ஆயிரம் கோடி வரை நடக்கும். வாரனாசி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்’’ என்றார்.

இங்கு தயாரிக்கப்படும் புடவை அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை விற்பனையாகும். இங்கு ரூ. 300 முதல் மலிவு விலையில் விசைத்தறியில் தயாரிக்கப்பட்ட சின்தெடிக் ஃபைபர் புடவைகள் கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை கொண்டு தயாரான புடவைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனையாகும் ஒரு புடவையை ஒரு நெசவாளர் தயாரிக்க 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும்.

கடந்த நவம்பர் மாதம் ஒரே இரவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு தான் இந்த தொழிலை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. இங்கு பெரும்பாலான வர்த்தகம் ரொக்கத்தில் அடிப்படையில் தான் நடந்து வந்தது. இதனால் வாரனாசியே முற்றிலும் செயலழிந்த நிலைக்கு உருவாகிவிட்டது. மீண்டும் புத்துயிர் பெறும் என்று இருந்த நம்பிக்கைக்கான வாய்ப்புகளையும் ஜிஎஸ்டி பொய்யாக்கிவிட்டது.

ஜிஎஸ்டி விதிப்படி ஒரு நிறுவனம் மாதத்திற்கு 3 முறை விற்பனை, கொள்முதல், வரி விதிப்பு, பணம் கொடுத்த விபரங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது போன்ற விதிமுறைகள் பாரம்பரியமாக நடந்து வந்த இந்த சிறு தொழிலுக்கு பெரும் சவாலாக அமைந்துவிட்டது. தொழிலுக்கு தேவையான கச்சா பொருட்கள், தயாரிப்புகள் போன்று அனைத்தும் கடன் மூலமே கொடுக்கல் வாங்கல் நடக்கும். முறையான ரசீதுகள் மூலம் இந்த தொழிலை மேற்கொள்வது கடினமான விஷயம்.

மேலும், பெஹல் கூறுகையில், ‘‘இந்த தொழில் முழுக்க முழுக்க 90 சதவீதம் வரை அமைப்பு சாரா தொழிலாகும். கல்வி அறிவு இல்லாத மக்களும், தொழில்நுட்பத்தை கையாள தெரியாத நெசவாளர்களும் தான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பனாரசி புடவைகளை நெசவாளர்களிடம் இருந்து வாங்கி நாடு முழுவதும் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யும் மொத்த விற்பனையாளர்களும் தடுமாற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் வரை அடக்க விலையை பராமரிப்பதற்காக இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித வரியையும் விதிக்கவில்லை. தற்போது வாடிக்கையாளர்களுக்கு வரி விதித்தால் 20 சதவீதம் வரை விலை உயரும். அதனால் ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கும் வரை இந்த தொழில் புத்துயிர் பெற வாய்ப்பு இல்லை’’ என்றார்.

ஜவுளி தொழிலுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அரசு முடிவு எடுத்ததை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் வாரனாசி நெசவாளர்கள், வர்த்தகர்கள் இதை எதிர்த்து 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது குறைகளை தீர்க்க யாரும் முன் வரவில்லை.

இதைதொடர்ந்து ஜூலை 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரனாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்துவிட்டார்.

சோரா பகுதியை சேர்ந்த பொரும்பாலான நெசவாளர்கள் அவர்கள் மூதாதையர்களின் பாராம்பரிய தொழிலை செய்து வருகின்றனர். அதே போல் வாரனாசி சவுக்கு பகுதியில் மொத்த விற்பனையாளர்கள் 4 முதல் 5வது தலைமுறையாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்திராத் ராம் தயா ராம் என்ற மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனம் 110வது ஆண்டாக செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருபவரின் தாத்தா தான் இதை தோற்றுவித்தவர். அதேபோல் சங்க பொதுச் செயலாளர் பெஹலின் மொத்த விற்பனை தொழில் அவரது தாத்தா ஏற்படுத்தியது. நூல் விநியோகஸ்தரான ராம்ஜிலால் சந்தக்கின் கடை அவரது தாத்தா கண்ஹய்யலால் ஜெத்மால் உருவாக்கியது.

ஜெய்த்பூர், சோரா நெசவாளர்கள், சவுக் வர்த்தகர்கள் மற்றும் இதோடு இணைந்த நூல் தயாரிப்பு, சாயம் பூசூதல் உள்ளிட்ட 12 வகையான உப தொழில்களில் பெரும்பாலானவர்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்தும் நம்பிக்கை அல்லது கடன் அடிப்படையிலேயே நடந்து வருகிறது. இவை அனைத்தும் சிறு மற்றும் குடும்ப தொழிலாக எவ்வித சேமிப்பும் இன்றி நடந்து வருகிறது.

நெசவாளர்களுக்கு தேவைப்படும் கச்சா பொருளான நூல் போன்றவற்றை அதன் விநியோகஸ்தரிடம் இருந்து பெற்று, புடவையை தயாரித்து கொடுத்து மொத்த விற்பனையாளரிடம் இருந்து பணம் பெற்ற பிறகே நூல்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சில்லரை வர்த்தகர்களும் கொள்முதல் செய்துவிட்டு, அவை விற்பனையான பிறகு ஒரு மாதம் கழித்து தான் மொத்த விற்பனையாளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். யாருடைய கைக்கும் உடனடியாக பணம் கிடைக்காது. பணம் பெறும் தேதி, நாட்கள் என்பது நிரந்தரம் கிடையாது.

ஜிஎஸ்டி முறையில் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் உடனடியாக ரசீது தேவைப்படும். இந்த முறை தான் புடவை தொழில் நடைமுறையை முடக்கி போட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபைபர், தங்கம், வெள்ளி ஜரிகை விநியோகஸ்தர்கள் நெசவாளர்களுக்கு கடன் மூலம் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர். உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் நெசவாளர்களை நிர்பந்தம் செய்கின்றனர். இதனால் தொழிலின் உடனடி வீழ்ச்சிக்கு இவை காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து நூல் விநியோகஸ்தர் ராம்ஜிலால் சந்தக் கூறுகையில், ‘‘நாங்கள் எப்படி கொடுக்க முடியும். மாதத்திற்கு 3 முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது’’ என்றார். மேலும், அவர் கூறுகையில், ‘‘ உடனடியாக பணம் கொடுத்து நூல்களை வாங்க நெசவாளர்களிடம் உபரி வருவாய் எதுவும் கிடையாது. பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி நெசவாளர்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி மற்றும் பட்டுக்கு 5 சதவீதம், ஜரிகை அல்லது தங்க நூல்களுக்கு 12 சதவீதம், பாலிஸ்டருக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. நெசவாளர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பாலிஸ்டருக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. இது நெசவு தொழிலில் கச்சா பொருட்களின் விலையை கனிசமாக அதிகரிக்க செய்துள்ளது’’ என்றார்.

‘‘நூல் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மாதம் 60 சதவீத தொழில் குறைந்துவிட்டது. குறைந்த அளவு நெசவாளர்கள் மட்டுமே இதில் தற்போது ஈடுபடுகின்றனர். பெரும்பாலானவர்கள் ஜிஎஸ்டி.யை தொல்லையாக கருதுகின்றனர்’’ என்றார். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின் பல வாரங்களாக சோராவில் உள்ள 500 தறிக் கூடங்களும் இயங்காமல் அமைதியாகிவிட்டது. சில கூடங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹசன் என்பவர் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் கூறுகையில், ‘‘ வாரத்தில் சில நாட்கள் மட்டுமே நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர். 60 சதவீதம் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜிஎஸ்டி.க்கு ஆகஸ்டில் பதிவு செய்தேன்.

இது வரை ஒரு முறை கூட ஜிஎஸ்டி.க்கு கணக்கு தாக்கல் செய்யவில்லை. ஏற்கனவே உள்ள பணியோடு சேர்த்து ஆவண பராமரிப்பையும் மேற்கொள்ள முடியவில்லை. எப்போது ரசீது பிரின்ட் அவுட் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. எவ்வளவு ஜிஎஸ்டி பொருந்தும். யாரிடம் இதை விதிப்பது என்றும் தெரியவில்லை. ஏற்கனவே வங்கிகளுக்கு அலைவதிலேயே பல மணி நேரம் வீணாகிறது. ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்கே காலை பொழுது முழுவதும் சரியாக இருக்கிறது. எனது தொடர்பில் உள்ள டீலர்கள் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் எப்போது ரசீது எடுப்பார்கள் என்பது தெரியவில்லை’’ என்றார். ஹசன் தம்பி நூர் அலிக்கு மற்றொரு பிரச்னை உருவாகியுள்ளது.

பருத்தி மற்றும் பாலிஸ்டர் இணைந்து தயாரிக்கப்படும் பிரபல மலிவான விசைத்தறி புடவைக்கு எவ்வாறு ஜிஎஸ்டி கணக்கீடு செய்வது என்ற பிரச்னை எழுந்துள்ளது. பாலிஸ்டருக்கு 18 சதவீதம் வரி விதிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கு வரி விதிக்கப்படுவதால் செலவு அதிகமாகிறது. விசைத்தறி இயக்குபவர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஜமீல் அகமது என்பவர் வாரத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பாதித்தார். ஜிஎஸ்டி.க்கு பிறகு இது ரூ.700 ஆக குறைந்துவிட்டது. ஹசன் மேலும் கூறுகையில், ‘‘ எனது நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பரில் ஒரு ஆடிட்டரை நியமனம் செய்துள்ளேன்.

அவர் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்கிறார். இது ஃபேப்ரிக்ஸ் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையாக அமைந்துவிட்டது. 95 சதவீத நெசவாளர்கள் ரசீது கொடுப்பதில்லை. அவர்கள் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய்யவும் இல்லை’’ என்றார். கல்வி அறிவு இல்லாத நெசவாளர்கள் மட்டும் ஜிஎஸ்டி.யை சவாலாக கருதவில்லை. கடந்த மாதம் 27ம் தேதி பெஹல் தனது நிறுவனத்தின் ஜிஎஸ்டி கணக்குக்கு வங்கி மூலம் ரூ. 15,092 செலுத்தினார். இதற்கு ரசீதும் வழங்கப்பட்டது.

ஆனால், மறுநாள் பணம் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது என்று வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறை. இதனால் எங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றார் பெஹல். இந்த அமைப்புசாரா தொழிலில் அமைப்பு சார்ந்தது என்றால் அது மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தான். இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் வரும் சஞ்சய் வாகி என்பவர் கூறுகையில், ‘‘இந்த தொழில் முழுக்க முழுக்க அட்ஜெஸ்ட்மென்ட் அடிப்படையிலேயே நடக்கும். நெசவாளர் எனக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கும் நானே செலுத்த வேண்டும்.

பின்னர் நான் விற்பனை செய்யும் போது ஒரே புடவைக்கு மீண்டும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்’’ என்றார். முதலில் செலுத்துவது உள்ளே வந்த பொருளுக்கான ஜிஎஸ்டி. இரண்டாவது முறை வித்தியாச தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி செலத்த வேண்டும். வாகி மேலும் கூறுகையில், ‘‘எதிர்காலத்தில் பனாரசி புடவை தயாரிப்பு துறை சார்ந்த அனைத்து பிரிவுகளையும் ஜிஎஸ்டி.யில் இணைந்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாறிவிடும் என நினைக்கிறேன். எனினும் தற்போது உடனடியாக எழும் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கான ஜிஎஸ்டி.யை செலுத்த சில்லரை விற்பனையாளர்களிடம் மூலதனம் இல்லை. ஆண்டுதோறும் வழக்கமாக கைத்தறி துறைக்கு மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடியை மானியமாக வழங்கும். ஆனால், இந்த தொகை எந்த வழியிலும் நெசவாளர் கைக்கு வந்து சேராது. இந்த தொகையை திரும்பி பெற்றுக் கொண்டு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்க வேண்டும். இல்லை என்றால் கலை நயம் மிக்க பனாரசி புடவை அழிவை சந்திக்கும் ’’ என்றார். இவரது மகன் சிரே கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி.யால் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால் எம்பிராயிடரி புடவைகளில் இருந்து நெய்யப்படும் புடவைகளுக்கு ஏற்பட்டுள்ள பேஷன் மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது’’ என்றார்.

 
English Summary
Varanasi sari weavers are abandoning their looms as GST rips business