திருவனந்தபுரம்: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது.
கேரளாவை மட்டுமல்ல, நாடடையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்யப்பட்ட இருவரும் கொச்சி அழைத்து வரும் முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்துள்ளது.
இதையடுத்து அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. அவரை காவலில் எடுக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த அதிரடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மனுவில், தங்க கடத்தலில் ஐக்கிய அரபு அமீரக தூதரக போலி முத்திரை, சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.