கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிக்க ஒரு கும்பம் வந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தபோது, கொள்ளையர்கள் போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் செயல்படாமல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆலை வளாகத்தில்  இரும்பு உப்டட தளவாட பொருட்கள் ஆலை  ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.  அதை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் 6 பேர் அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதைகண்ட கொள்ளையர்கள், போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர்.  3 பெட்ரோல் குண்டுகள் வெடித்த நிலையில் சில பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. இந்த மோதலில்,  போலீசார் அதிஷ்டாவசமாக  உயிர் தப்பினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்த கும்பல் கடந்த சில நாட்களாக ஆலைக்குள் புகுந்து இரும்பு பொருட்களை திருடி வந்ததாகவும், இதுவரை 1,500 டன்னுக்கு மேல் இரும்பு பொருட்களை திருடி உள்ளதாக கூறப்படு கிறது. போலீசார் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச்சென்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான் (மே 10ந்தேதி) சட்டமன்றத்தில் நடைபெற்ற  காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து விரிவாக பேசினார். ஆனால், இன்று அவர் பேசியதற்கு மாறாக, கடலூரில் கொள்ளையர்கள் போலீசார் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.