பாரீஸ்:

850 ஆண்டு பழமையான பாரீஸ் சர்ச்சில் திடீர் தீவிபத்து எற்பட்டது. மேற்கூரையில் பற்றி எரியும் நெருப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.


பாரீசின் புகழ்பெற்ற நோட்ரே டேம் கேதட்ரல் சர்ச்சில் திங்களன்று மாலை 5.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் மேற்கூரை கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் பாரீஸ் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த சர்ச்சில் புனரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாக கேதட்ரல் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பராமரிப்பு பணியின்போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான சர்ச்சில் தீவிபத்து ஏற்பட்டது பாரீஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சர்ச்சுக்கு ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகின்றனர். பாரீஸில் அதிகமானோர் வருகை தரும் இடமாக இந்த வரலாற்றுப் புகழ்வாய்ந்த சர்ச் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நோட்ரே டேம் கத்தீட்ரல் சர்ச்சில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருக்கிறது. விரைந்து செயல்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி செய்யுங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரீஸ் சர்ச் உருவான வரலாறு

பாரீஸ் நகரின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்க வேண்டும் என பிரான்ஸ் மன்னர் 7-ம் லூயிஸ் விரும்பினார்.

இதனையடுத்து, மவுரீஸ் சுல்லி என்பவர் பிஷப்பாக பதவி உயர்வு செய்யப்பட்டு, நோட்ரே-டேம் சர்ச் கட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நோட்ரே-டேம் சர்ச் கடந்த 1160-ம் ஆண்டு கட்ட தொடங்கி, 1260- ம் ஆண்டில் பணிகள் முடிந்தன. இந்த சர்ச்சின் மேற்கூரை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.

1793-ல் நடந்த ப்ரெஞ்ச் புரட்சியின்போது, இந்த சர்ச் பராமரிப்பின்றி போனது. மன்னர்களின் 28 சிலைகள் சேமடைந்தன.

அதன்பின்னர், தொடர்ந்து இந்த சர்ச் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு பராமரிப்புப் பணிகள் நடந்தன. அதன்பின்னர் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=KBkDA2e1gaE[/embedyt]