பயங்கர தீ விபத்து: பாரிசின் பாரம்பரியம் மிக்க நோட்ரே டேம் சர்ச் எரிந்து நாசம் (வீடியோ)

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும்  புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் கோவிலின்  மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. இது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம்.  பாரம்பரிய மிக்க இந்த தேவாலயம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டின் பாரம்பரிய  சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி தேவாலயத்தின் ஊசி கோபுரத்திலும் பிடித்து  திபுதிபுவென எரிந்தது. இதில் தேவாலயத்தின் மேற்கூரை உள்பட கோபுரம் முழுவதும் எரிந்து நாசமானது. தீயின் வெப்பம் காரணமாக  ஊசி கோபுரம் முழுவதும் இடிந்து விழுந்தது.

தீபரவியது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த பழமையான சர்ச்,  ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தேவாலயத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது இந்ததேவாலயம் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  நோட்ரே டேம் சர்ச் தீ விபத்து காரணமாக,  கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை.

நன்றி: The Guardian

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: France church, FranceFire, NotreDameCathedral
-=-