திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த  சுற்றுலா வேன்மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்  7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே நின்றிருந்த சுற்றுலா வேன் மீது லாரி மோதி கோர விபத்து நடந்துள்ளது. இந்த  விபத்தில், ஆம்பூர் ஓனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்தில்  10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

 கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி  அன்று ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர், 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேன் பஞ்சர் ஆகி நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வேன் ஓட்டுநர், பஞ்சர் ஆன வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில், வேனில் இருந்தவர்களும் சாலையிலேயே நின்றுள்ளனர். அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த மினி லாரி, பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.