பெங்களூரு:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் இன்று கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
1vidhana-soudhaசுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதைக் கண்டித்து, கர்நாடகாவில் நேற்று, விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராடத்தை நடத்தி வருகின்றன.
நேற்றைய போராட்டத்தின் போது, அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், நெடுஞ்சாலைகளையும் முற்றுகையிட்டதால், போக்குவரத்து தடைபட்டது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்,  சுப்ரீம் கோர்ட்டு ‘தமிழகத்திற்கு, 10 நாட்களுக்கு, வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, கர்நாடக  அரசுக்கு,  உத்தரவிட்டது.
jeya
அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில்  பல இடங்களில் போராட்டம் வெடித்தது.  மாண்டியா மாவட்டத்தில், நேற்று  முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றது. அதன் படி, அந்நகரில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் நேற்று மூடப்பட்டிருந்தன; கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
திறந்திருந்த ஒரு சில அரசு அலுவலகங்களை, போராட்டக்காரர்கள் சூறையாடினர்.காவிரி டெல்டா பகுதி அமைந்துள்ள, பெங்களூரூ – மைசூரு நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தமிழகம், கர்நாடகாவுக்கு இடையேயான பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மாண்டியாவைத் தவிர, மைசூரு மற்றும் ஹாசன் மாவட்டங்களிலும் போராட்டம்  நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மைகளை போராட்டக்காரர்கள் எரித்தனர்.
1cauvery-issue-06-1473168627
இதற்கிடையே, கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதியில், 9ம் தேதி வரை, பார்வையாளர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு, துணை ராணுவப் படையினருடன் கர்நாடக அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட அமைப்பினரின் போராட்டத்தால்,ஓசூர் வழியாக, பெங்களூரு செல்லும், 300க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள், மாநில எல்லையான  ஓசூரில் நிறுத்தப்பட்டன; அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.
அதுபோல, பெங்களூரு, மைசூரு, மும்பை உட்பட பல இடங்களுக்கு செல்லும், 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், கிருஷ்ணகிரி, ‘டோல்கேட்’ சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறும்போது,  மக்கள் அமைதி காக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி தான் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி கண்காணிப்பு குழுவிடம் நம் நிலைமையை எடுத்துக் கூறுவோம். கர்நாடக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். என்றார்.
தமிழகத்துக்கு காவிரி நதி நீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து, 9ம் தேதி, ‘கர்நாடகா பந்த்’ நடத்த கன்னட கூட்டமைப்பு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மேலும், முதல்வர் சித்தராமையா பதவி விலகக் கோரி கர்நாடக சட்டசபையை முற்றுகையிடப்போவதாகவும் கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனால் பெங்களூர் விதான சவுதா பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.