சென்னை

சென்னை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒரு பயணி அவசர கால கதவைத் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. திடீரென விமானத்தின் அவசரக்கால கதவு திறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி கேட்கத்  தொடங்கியதால் விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அவசரக்கால கதவைத் திறப்பதற்கான பட்டனை அழுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.   தமக்கு அது அவசரக்கால கதவுக்கான பட்டன் என்பது தெரியாது என்றும், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால், அதனை அழுத்திவிட்டதாகவும் அந்த பயணி கூறியுள்ளார். அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த விமான ஊழியர்கள் பயணியை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.

விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவசரக்கால கதவைத் திறந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரோஸ் என்பதும், அவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.