தங்கவசம் அளித்த ஜெயலலிதா (பைல் படம்)

மதுரை:

ரும் 30ந்தேதி நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு அணிவிக்க உள்ள தங்க கவசம், வங்கியில் இருந்து எடுத்துச்செல்வது தொடர்பாக அதிமுக இரு அணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் மதுரையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தங்க கவனம் வைக்கப்பட்டுள்ள வங்கி அருகில் எடப்பாடி,ஓபிஎஸ் ஆதரவினரும், டிடிவி தரப்பு ஆதரவாளர்களும் திரண்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜயந்தி விழாவின்போது அணிவிக்கும் வகையில் மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவால் கடந்த 2014ம் ஆண்டு  13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

இந்த கவசத்தை விழா முடிந்ததும் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி, அந்த தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுக்கும் உரிமை,  அதிமுகவின் பொருளாளருக்கும்,  தேவர் நினைவாலயத்தின் நிர்வாகிக்கும்  உண்டு. அதன்படி இருவரும் இணைந்து சென்றுதான்   தங்கக்கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது அதிமுக உடைந்து, வழக்குகளில் சிக்குண்டு இருப்பதால், தங்க கவசம் பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ஓபிஎஸ் அதிமுக பொருளாளராக இருந்தார். தற்போது அதிமுக உடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறது. இதுகுறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், எடப்பாடி,ஓபிஎஸ் அணியிடம் தேவரின் தங்க கவசத்தை கொடுக்கக்கூடாது என டிடிவி தரப்பில் இருந்து வங்கிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேவர் ஜெயந்திக்காக தங்க கவசம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை தங்க கவசத்தை பெறுவதற்காக துணைமுதல்வர்  மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வங்கிக்கு வந்தனர். தேவரின் கவசம் ஒப்படைப்புவங்கிக்கு வந்த ஓபிஎஸ், அமைச்சர்கள் கையெழுத்து போட்டனர்.

இதையடுத்து பெட்டகத்தில் இருந்த தேவரின் தங்கக்கவசம், கிரீடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த டிடிவி ஆதரவாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.  . மேலூர் எம்எல்ஏ சாமி சில ஆவணங்களுடன் வங்கி கிளைக்கு சென்றார். அப்போது ஏராளமானோர் வங்கி வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆதரவாளர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனால் தேவர் தங்கக் கவசத்தை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. அந்த பகுதியில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.