மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் முக்கிய பகுதிகள் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தற்போது இந்தப் பகுதிகளில் வெள்ளம் வடிந்ததை அடுத்து வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பலரும் வெள்ள பாதிப்பு அதிகம் இல்லாத தெருக்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது.

இணையதளம் மூலமாகவும் தரகர்கள் மூலமாகவும் வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரின் தாழ்வான பகுதிகளில் இருந்து ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிபெயர அதிகளவு ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

தவிர, கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம், ராயப்பேட்டை, கொரட்டூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கொளத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், சேலையூர், தாம்பரத்தை அடுத்த கடப்பேரி உள்ளிட்ட மேடான பகுதிகளில் வீடு தேட ஆரம்பித்துள்ளனர்.

பள்ளிக்கரனை, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் போன்ற இடங்களில் வாடகைக்கு குடியிருக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை. மாறாக வடபழனி, ஆதம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் ஐ.டி. நிறுவன ஊழியர்களும் மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்குப் பிறகு பெருங்குடி உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்வதையே விரும்புவதாக ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஆன்லைன் நிறுவனங்களின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைப் பயன்படுத்தி அதன் அருகில் உள்ள ஓடைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட இந்த வெள்ளம் காரணமாக பல தசாப்தங்களாக ஒரே பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்வது அதிகரித்து வரும் நிலையில் மிக்ஜாம் புயல் சென்னை நகர மக்களை மேலும் அச்சம் கொள்ள செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.