சென்னை: தமிழ்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற கிளையின் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில், தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை ஆணையர் தடை விதிக்கப்படாத 23 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
- தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை நாளை மாலைக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- தேர்வுக் குழு 15ம் தேதிக்குள் தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை 16ம் தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
- இந்த பட்டியலுக்கு 18ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- 19ம் தேதி பள்ளி மேலாண்மை குழுவின் ஒப்புதலை பெற வேண்டும்.
- 20ம் தேதி மாலைக்குள் நியமனம் பெற்றவரை பணியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.