சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை என மொத்தம் 8 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறாளிகளும், கடல் அழகை கண்டுகளிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இரண்டு இடங்களில் பலகையிலான தனிப்பாதை அமைக்கப்பட்டது.உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தற்காலிக நடைபாதையை, அந்த தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் நேரு உள்பட அதிகாரி களும் இருந்தனர். இந்த தற்காலிக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட் டிருந்த நிலையில், இன்று திடீரென உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைப்பு…