மதுரை: கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக கருத்து  தெரிவித்துள்ளது.  பல கோவில்களில், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வரும்  நிலையில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த  சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுவார்கள் கோவில் திருவிழா மற்றும் எருது விடும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வடவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் ஜாதி அடிப்படையாகக் கொண்டு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் இதை தடை செய்ய வேண்டும், யாருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற  நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயில் திருவிழாக்களில் யாருக்கு முதல் மரியாதை கிடையாது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி,  “கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல” என்று கூறியதுடன்,  மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கோவிலின் யாருக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.