சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் ஆலயங்கள் திறக்கப்பட்டன. காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு சென்று,தங்களது விருப்பத்தெய்வங்களை தரிசித்து பரவலம் அடைந்தனர்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதலே வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்பட்டன. பக்தர்கள் இன்றி, தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. தற்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுக்கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கோயில்களின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுடன், உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இருமல், சளி போன்ற நோய் அறிகுறி இருந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று அதிகாலை முதல் அனைத்து கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் திறக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணி முதலே பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது இஷ்ட தெய்வங்களை கண்டு பரவசம் அடைந்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் நேற்று கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.