இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா உள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை தவிர வேறு யாரும் மே மாதம் 4ம் தேதிக்குப் பின் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளதோடு இந்தியாவுக்கான நேரடி விமான சேவையையும் நிறுத்திவைத்துள்ளது.

பணிபுரிவோர் தவிர பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தனது அண்ணாத்த படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு வந்த ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப்பின் 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுவரும் ரஜினி 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செல்ல முடியவில்லை.

இந்த ஆண்டு இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றிருக்கும் இவர் கொரோனா பரவல் நேரத்தில் அமெரிக்கா செல்வதற்கான வழிமுறைகள் குறித்து இரண்டு மத்திய அமைச்சர்களிடம் விளக்கம் பெற்றதாகவும் அதில் ஒருவர் தமிழர் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

அமெரிக்க விசாவுடன் 14 பேர் செல்லக்கூடிய தனி விமானத்தில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இம்மாதம் 19ம் தேதி கத்தார் தலைநகர் தோகா பறந்த ரஜினிகாந்த் அங்கிருந்து பயணிகள் விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் உள்ள பிரபல சிறுநீரக மருத்துவமனையான மேயோ க்ளினிக்கை விட்டு ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வெளியே வரும் புகைப்டம் கடந்த இருதினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்கா செல்ல முடியாமல் தங்கள் குடும்பத்தினரை ஆண்டுக்கனக்காக பிரிந்து இந்தியாவில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்திற்கு மட்டும் குறுகிய காலத்தில் சிறப்பு அனுமதி கிடைத்தது எப்படி என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

மேலும், மருத்துவ அவசரம் உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் செய்துகொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி என்றும் கேட்டிருக்கும் கஸ்தூரி, கடந்த ஆண்டு ஊரடங்கு விதியை மீறி இ-பாஸ் இல்லாமல் தனது பண்ணை வீட்டுக்கு ரஜினி சென்ற சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

அதோடு, அவசர மருத்துவ உதவி தேவைப்படுமளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து என்னைப் போன்ற அவரது ரசிகர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூறுபவதோடு தற்போது நடிகர் ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் வருமா என்றும் காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ரஜினி ரசிகர்களோ இதுகுறித்து மத்திய அரசிடமும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமும் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று வரிந்துகட்டுகின்றனர்.

ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்காவில் உள்ளனர்.

சௌந்தர்யா – விசாகன்

‘தி கிரே மென்’ என்ற ஆங்கில படத்தில் நடிப்பதற்கான ஒர்க்பர்மிட்டில் சென்றிருக்கும் நடிகர் தனுஷின் இந்த ஆங்கிலப் படத்திற்கான சூட்டிங் எப்பொழுது முடியும் என்று தெரியவில்லை.

தனி விமானத்தில் ரஜினியுடன் சென்றிருப்பதாக சொல்லப்படும் அவரது இளையமகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் பார்மா நிறுவன அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.