சென்னை: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்பிரமணியசாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 10.64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய வகையில் கட்டுமானங்களை உருவாக்கி பயன்படுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கூறுகிறது. ஆனால், தமிழக அரசின் வருவாய்த்துறை, அந்த நிலத்தை கிராம நத்தமாக மாற்றி 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து, கோயில் பரம்பரை அறங்காவலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தடையில்லா சான்று பெறாமல் பட்டா வழங்க கூடாது என விதிகள் உள்ள நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு, அரசு விதிகளை மீறி பட்டா வழங்கியுள்ளது. கோயில் நிலங்களை விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அதை ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், பட்டா வழங்கபட்ட இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று கூறியதுடன், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்களை கேட்டபோது, ஏதும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, கோயிலின் நிலத்தை அதன் வருமானத்திற்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்திற்காக பயன்படுத்தவோ? வேறு யாருக்கு வழங்கவோ முடியாது? என அறநிலைய துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது, அந்த நிலம் எப்படி மாற்றம் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்று அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.