சென்னை: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள், சிலைகள், கோவிலுக்குரிய பொருட்கள்., நகைகள் மற்றும் அதற்குரிய சொத்துக்கள், வருமானம் தரும் நிலங்கள் உள்பட அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஆனால், அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பல காலமாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கோவில் நிலங்களை இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து,. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் சொத்துகள் குறித்து வெளிப்படைத்தன்மையாக இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளையும் சமீபத்தில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில்  திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள “தமிழ்நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் நாளை வெளியிடப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களின் விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்களை இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.