சென்னை: 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது என்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை செப்டம்பர் 22 சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளதுடன், அதற்கான குழுவையும் நியமித்து உள்ளது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் உயர் நீதின்றத்தில் பொதுநலமனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,   “இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட முடியுமேயன்றி, மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிடவோ, வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டிபாசிட் செய்யவோ முடியாது. பக்தர்கள் காணிக்கையாக, ஆபரணமாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரிகளின் இந்த முடிவு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 1977 ஆம் ஆண்டு முதல் கோவிலில் உளள தங்க நகைகள் உருக்கி  பணமாக்குதல் நடந்து வருகிறது, இதுவரை 5 லட்சம் கிலோ தங்கம் உருக்கி பார்களாக உருக்கி  வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு  உள்ளது. இதன் மூலம் ரூ.11 கோடி வட்டி வந்துகொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும், இந்த நகைகளை உருக்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட 3 பேர் குழு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் முன்னிலையில் கோவில்களுக்கு சொந்த சுமார்  2137 கிலோ தங்கம் மும்பையில் உள்ள அரசு துறையில் உருக்கப்பட்டு, பார்களாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என தெரிவித்தார். அத்துடன் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.