சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டிஜிபி பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு டிஜிபி (DGP) நியமன விவகாரத்தில் மத்திய அரசுடன் (மற்றும் யுபிஎஸ்சி-யுடன்) நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. மே 29, 2026 அன்று, எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய முந்தைய டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 29, 2025 அன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
மகேஷ் குமார் அகர்வால்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
முன்னதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் எனப்படும் ஆயுதப் படை கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றி உள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னையில் இவரின் சிறப்பான நிர்வாகம், பலரின் பாராட்டுதல்களை பெற்றது.
தமிழ்நாட்டில், முதலில் தேனி மாவட்ட எஸ்பியாக பணியில் சேர்ந்தவர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை மாவட்ட காவல்துறை ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை காவல் ஆணையர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் என பல பதவிகளில் இருந்தர். தற்போது டிஜிபியாக பணி உயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
[youtube-feed feed=1]