தராபாத்

தெலுங்கானாவில் உள்ள தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள் அரசிடம் நிதி உதவி கோரி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.   தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் தெலுங்கானாவில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெலுங்கானாவில் உள்ள குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் ஒரு கோரிக்கை விடுத்துள்ளன.  அந்த பள்ளிகளின் நிர்வாக சங்கத்தினர், “தெலுங்கானாவில் தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால் சுமார் 3000 தனியார் குறைந்த கட்டண பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.   இந்த பள்ளிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் வருமானம் இல்லாததால் வேறு பணிகளுக்குச் சென்று விட்டனர்.

தெலுங்கானாவில் உள்ள 11,500 தனியார்ப் பள்ளிகளில் 9,500 பள்ளிகள் குறைந்த கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் ஆகும்.  இங்கு சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.   தற்போது தொடர்ந்து இந்த பள்ளிகள் இயங்காததால் சுமார் 75% மாணவர்கள் பள்ளியில் இருந்து தாங்களாகவே நீங்கி உள்ளனர்.   இந்த பள்ளிகளில் 50% பள்ளிகளால் இணைய வகுப்பு நடத்த வசதி இல்லை.   இதனால் 3500 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

தனியார்ப் பள்ளிகளில் கட்டணம் மட்டுமே நிர்வாக செலவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  எனவே இந்த பள்ளிகளுக்குக் கடன் சுமையும் அதிகரித்துள்ளது.  எனவே தெலுங்கானா அரசு இந்த பள்ளிகளைச் செப்டம்பர் 1 முதல் திறக்க வசதியாக நிதி உதவி அளிக்க வேண்டும்.” என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.