நிஜாமாபாத்

தெலுங்கானா மாநிலத்தில் உள நிஜாமாபாத் நகருக்கு இந்தூரு எனப் பெயர் மாற்றம் செய்ய விரும்புவதாக அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

 

பாஜகவினர் தொடர்ந்து இந்தியாவின் பல நகரங்களின் பெயர்களை மாற்றி வருகின்றனர். கடந்த வருடம் நடந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்ட உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐதராபாத் நகரின் பெயரை பாக்யநகர் என மாற்றப்படும் என அறிவித்தார். 16 ஆம் ற்றாண்டில் பாகமதி என்னும் பெயரில் இருந்த ஒரு நாட்டியப் பெண்மணியின் பெயரில் முதலில் இந்த நகர் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் சிலர் அந்த பெண் அப்பகுதியின் அரசரான முகமதுகுலி குத் ஷா என்பவரை மதம் மாறி மணம் புரிந்துக் கொண்ட போது அவர் பெயர் ஐதர் மகால் என மாற்றப்பட்டதாகவும் அதையொட்டி இந்த நகரின் பெயர் ஐதராபாத் என மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் இது வரை இந்த நகரில் அப்படி ஒரு அரசி வாழ்ந்ததற்கு எந்த ஒரு சரித்திர சான்றும் கிடையாது.

தெலுங்கானாவில் உள்ள மற்றொரு நகரான நிஜாமாபாத் பகுதியின் மக்களவை உறுப்பினர் தர்மபுரி ஆனந்த் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அந்நகரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, “நமது ஊருக்கு முதலில் இந்தூரு எனப் பெயர் இருந்தது. இந்து என்றால் இந்தியா அல்லது இந்துஸ்தான் எனப் பொருள் ஆகும். அந்த பெயர் இருக்கும் வரையில் நமது ஊர் செழிப்புடன் இருந்தது.  ஆனால் நிஜாமின் பெயரால் நிஜாமாபாத் என மாற்றப்பட்டது.

தற்போது நிஜமாபாத் வறண்ட பூமி ஆகி விட்டது. நிஜாமாபாத் சர்க்கரை  ஆலை மூடப்பட்டது. மற்றும் இங்குள்ள விவசாயிகளுக்கு இதனால் நன்மை கிடைக்கவில்லை. எனவே இந்த ஊருக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால் நிஜாமாபாத் என்னும் பெயரை நீக்கி விட்டு பழைய பெயரான இந்தூரு என்னும் பெயரை வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நகர் குறித்து விசாரித்த போது நகரின் பழைய பெயர் இந்திரபுரா என்று  இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட ராஷ்டிரகுத மன்னர் மூன்றாம் இந்திரன் பெயரால் இந்த  நகரம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் அசாஃப் ஜா வம்சத்தை நிறுவிய நிஜாம் உல் முல்க் என்னும் அரசரால் இந்த நகரின் பெயர் நிஜாமாபாத் என மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.