தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது.

‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகிறார்.

இதற்காக செகந்திராபாத் நகரில் உள்ள ‘பரேட்’ மைதானம் மற்றும் ஹைதராபாத் நகரில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியம் ஆகிய இடங்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘பரேட்’ மைதானம் மற்றும் மாநில அரசின் கீழ் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியம் ஆகியவற்றுக்கு அனுமதி கோரிய நிலையில் இந்த இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதுடன் இடநெருக்கடியான எல்.பி.நகர் ஸ்டேடியத்தை மாநில அரசு பரிந்துரை செய்தது.

அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக மாநிலத்தில் உள்ள சுமார் 35000 வாக்குச்சாவடியில் இருந்தும் கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய காத்திருந்த மாநில தலைமைக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான துக்குகொடா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்காக தங்கள் விவசாய நிலங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள இந்த பகுதியில் உள்ள வானம் பார்த்த விவசாய நிலங்களை வழங்கியுள்ள அந்தப் பகுதி விவசாயிகள், தெலுங்கானா மாநிலம் உருவாகக் காரணமாக இருந்த சோனியா காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாஜக மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் இடம்வழங்காததை கண்டித்துள்ளனர்.

ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை கட்சிப் பொதுக்கூட்டத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ள விவசாயிகளுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் நன்றி தெரிவித்து வரும் நிலையில் அவர்களின் அனுமதி கடிதத்துடன் காவல்துறையிடம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக அனுமதிகேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த இடத்தை பொதுக்கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் அதேவேளையில் இதன் அருகே உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை வாகன நிறுத்தும் இடங்களாக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு இடம்வழங்காமல் இடையூறு ஏற்படுத்திய நிலையில் துக்குகொடா விவசாயிகள் உதவிக்கரம் நீட்டி இருப்பது அம்மாநில அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாகவே கருதப்படுகிறது.