பாகுபலியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யும் புதிய படம் ‘ரவுத்ரம்.. ரணம்..ருத்திரம் ( RRR).

ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ்கான், அலியா பட் உள்ளிட்டோர் இதில் நடிக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளிகளான கொமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

கொமரம் பீம் வேடத்தில் நடிக்கும் ஜுனியர் என்.டி.ஆர்., இஸ்லாமியர்கள் அணியும் உடையுடன் வருவது போல் டீசரில் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநில பா.ஜ.க, தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான, சஞ்சய் குமார் சித்திப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, “ராஜமவுலியின் படம் இந்துக்களின் மத உணர்வுகளை புண் படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

“இந்த படம் வெளியாகும் அத்தனை தியேட்டர்களையும் தீ வைத்துக்கொளுத்துவோம். டைரக்டர் ராஜமவுலியை கம்பால் தாக்குவோம்” என்றெல்லாம் ஆவேசமாக அவர் பேசினார்.

அவரது இந்த கருத்துக்கு தெலுங்கு சினிமா உலகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜமவுலி, இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.

– பா.பாரதி