கேரளா:
ன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை இன்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அரண்மனை 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூா் சமஸ்தான மன்னரான அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வா்மாவால் கட்டப்பட்டது. கேரள கலைநயத்துடன் அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

186 ஏக்கா் பரப்பளவு கொண்ட கோட்டையில் 6.5 ஏக்கரில் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் பல அரிய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன. இதனை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா்.கரோனா தொற்று பரவல் காரணமாக நிகழாண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பத்மநாபபுரம் அரண்மனையும் மூடப்பட்டது.

தற்போது கரோனா குறைந்து வரும் நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையை திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று முதல் அரண்மனையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரண்மனை பொறுப்பு அதிகாரி அஜித்குமார் கூறியது: அரண்மனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். நேரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொ்மல் ஸ்கேனா் மூலம் பரிசோதனை செய்த பின்னா் அரண்மனை நுழைவாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும், 10 வயதுக்கு குறைவான சிறுவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அனுமதி இல்லை.கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரண்மனையை சுற்றி பாா்க்க செல்லும் குறுகலான வழி பாதைகள் அடைக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.