பாட்னா :

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது.

இந்த தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போட்டியிடுகிறது.

ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி தனித்து களம் காண்கிறது.

அந்த கட்சியின் தலைவரும், ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பஸ்வான், தேர்தல் பிரச்சாரத்தில் ’ நிதீஷ்குமாரை வறுத்தெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ஜிதன் ராம் மஞ்சி அளித்த பேட்டியில் “ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தில் சிராக் பஸ்வான் மீது சந்தேகமாக உள்ளது. எனவே பஸ்வான் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்துள்ள சிராக் பஸ்வான் “பீகாரில் தேர்தல் நடந்து வரும் நிலையில் எனது தந்தையின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.

“எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மஞ்சியிடம் தகவல் சொன்னேன். ஆனால் அவர் பார்க்க வரவே இல்லை. ஆனால் இப்போது குற்றம் சாட்டுகிறார்” என சிராக் தெரிவித்தார்.

“எனது தந்தையின் மரணம் குறித்து கூறப்படும் கட்டுக்கதைகள் எல்லாம், முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் திரைக்கதை” என குற்றம் சாட்டிய சிராக் “நான் முதல்-அமைச்சர் ஆவதை தடுக்கவே இது போன்ற செயலில் அவர் ஈடுபடுகிறார்” என்று குறிப்பிட்டார்.

– பா.பாரதி