டெல்லி: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில பகுதி களில் வரும் 26ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் (19ந்தேதி)  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.  இது நேற்று (20ந்தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டு உள்ளது எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப்புயலாகவும், 24 மணி நேரத்தில் மிக தீவிரப்புயலாகவும் வலுப்பெறக்கூடும் . 25ஆம் தேதி அதிகாலை ஓமன் – ஏமன் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழ்நாடு புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் 26ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று 23ந்தேதி காற்றழுத்த  மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இதன் காரணமாக,  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.10.2023 மற்றும் 26.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.